Wednesday, November 28, 2018

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் “சஷாக்ட் மகிளா” திட்டம்

மகளிர் குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க வழி செய்வதற்காக, “சஷாக்ட் மகிளா” என்னும் திட்டத்தை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இமாச்சலப் பிரதேச அரசு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சேவையை அளிக்கும் இமாச்சல் சுகாதார திட்டத்தை (Himachal Health Care Scheme – HIMCARE) செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்

2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியர்

துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான டிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற, முதலாவது இந்தியராக சண்டிகரைச் சேர்ந்த, இளம் இந்திய குழிப் பந்தாட்டக்காரரான, சுபன்கர் சர்மா உருவெடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் இந்த விருதை வென்ற முதலாவது இந்தியர் இவராவார்.

ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்டின் ரூக்கி விருதை அர்ஜுன் அட்வால் (1995), சிவ் கபூர் (2005) மற்றும் சி. முனியப்பன் (2009) ஆகியோர் வென்று உள்ளனர்.  

விங்சூட் முறையில் விமானத்தில் இருந்து குதித்து பெண் சாதனை

உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஹீதர் ஸ்வான் (Heather Swan) என்ற பெண் விங்சூட் முறையில், வானிலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.  

விமானம் மூலம் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்ற அவர் தனது கணவருடன் விமானத்தில் இருந்து குதித்தார். அப்போது அவர் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தார்.

இதன் மூலம் விங்சூட் முறையில் முதலில் பறந்த பெண் என்ற பெருமையை ஸ்வான் பெற்றுள்ளார்.  

செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம்

அமெரிக்காவின் இன்சைட் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பொருட்டு அமெரிக்கா அனுப்பிய 9வது விண்கலம் இதுவாகும்.

கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களாக 548 மில்லியன் கி.மீட்டர் தொலைவு பயணித்து செவ்வாயை சென்றடைந்துள்ளது. 

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா பெரும் முனைப்பு காட்டி வருகிறது. 

செவ்வாய் கிரகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்யும் விதமாக இன்சைட் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம் வெற்றிகரமாக கால்பதித்து முதல்படத்தை அனுப்பி வைத்ததது.

உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

நாட்டிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தமிழகம் இந்த விருதை தொடர்ந்து 3-வது முறையாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுடெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பாக நடைபெற்ற 8 வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் தமிழக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குத் திறன் பயிற்சி

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் பயிற்சியளிக்கவுள்ளதாக, ஆஸ்திரேலிய நிறுவனமான, மூஃபார்ம் தெரிவித்துள்ளது.

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குக் கால்நடைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற தளங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கவிருக்கிறது மூஃபார்ம் நிறுவனம். 

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூஃபார்ம் நிறுவனர், பரம் சிங் இந்தப் பயிற்சி திட்டத்தை அறிவித்தார்.

அவர் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றார்.  

Tuesday, November 27, 2018

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம் - நவம்பர் 27

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.

1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார்.

அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங். விஸ்வநாத் பிரதாப் சிங். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து புதிய  தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். 

ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

Monday, November 26, 2018

நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி

கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில்  உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள 7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிடும்.

அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக, தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டம் மூலம் கிடைத்த நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது

Sunday, November 25, 2018

காமன்வெல்த் வாள் சண்டை: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்

காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் சென்னையை சேர்ந்த சிஏ பவானி தேவி பங்கேற்றார்.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதினார்.

உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எமியை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.

இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.

பவானிதேவி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருந்தார். 

இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக “சிம் ஜோங் யாங்” நியமனம்

இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக “சிம் ஜோங் யாங்” நியமனம்

சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் துபாய் நகரில் நடைபெற்ற இன்டர்போல் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பு: சர்வதேச காவல் துறை (The International Criminal  Police Organization – INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக செப்டம்பர் 7, 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.

ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் இடையேயான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் இடையேயான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

குறிப்பு: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Friday, November 23, 2018

Nov 24 - நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருது


நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களான சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சோப்புகளுடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிகள் தூய்மைக்கான விருதுகளை பெருவகற்குமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதினை கலெக்டர் ஷில்பா அவர்கள் வழங்கினார்.

Nov 24 - ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

சீன நாடானது, விண்வெளி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஷியான் – 6 என்னும் செயற்கைகோள் மற்றும் 4 சிறியவகை செயற்கைக் கோள்களை “லாங் மார்ச் – 2டி” என்ற ஒரே ராக்கெட் மூலம் வெற்றிகரமாக, விண்ணில் செலுத்தியது. மார்ச் – 2டி ராக்கெட் மூலம் அந்தச் செயற்கைக்கோள் கான்ஸீ மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

Nov 24 - 2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தை "Toxic"- ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தை "Toxic"- ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ‘Toxic’’ எனும் அடைமொழிச் சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி அறிவித்துள்ளது.

இந்த அடைமொழிச் சொல்லானது “நச்சுத்தன்மை” என்ற பொருளில் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சொல்லின் அதிகபட்ச பயன்பாடானது அதன் தேர்ந்தெடுப்பிற்கு வழி வகுத்துள்ளது. 2017-ல் ‘Youthquake’ என்ற சொல்லும் 2016ல் ‘Post truth’ என்ற சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.  

Nov 24 - பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஸ்மார்ட்போனில் நவீன வசதி

பாலில் கலப்படம் இருந்தால் இனி ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாலோகுரோமட்டிக் என்று அழைக்கப்படும், நானோ அளவிலான இண்டிகேட்டர் காகிதத்தில் சிப் பொருத்தி சென்சார் செய்யும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

சென்சார் உள்ள காகிதம் பாலில் தோய்க்கப்படும். அந்தக் காகிதத்தில் ஏற்படும் நிறமாற்றம் ஸ்மார்ட்போன் கேமராவில் படமாக் கப்பட்டு, அல்காரிதம் மூலம் அதன் pH அளவை எளிதில் காண முடியும். 

இதன்மூலம் பாலில் கலப் படம் உள்ளதா இல்லையா என் பதை எளிதில் காணலாம்.

Nov 24 - செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் பட்டியல்

செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் பட்டியல்

யுகவ் நிறுவனம் சார்பில் ‘இன்புளுயன்ஸர் இன்டக்ஸ் 2018’ என்ற தலைப்பில் மக்களைக் கவர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. 

கருத்துக்கணிப்பின் முடிவுகளை யுகவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மக்களின் விருப்பம், நம்பிக்கை, தனித்துவம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 10 செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இதில் முதலிடத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இடம் பெற்றுள்ளார்,

2-ம் இடத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றார்.

3-வதுஇடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும்,

4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும்,

கோலி 6-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 5-வது இடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் மக்களைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 15-வது இடத்தில் உள்ளார்.

Nov 23 - உலக திறமையான நாடுகள் பட்டியல் – 2018

உலக திறமையான நாடுகள் பட்டியல் – 2018

உள்நாட்டு மக்களுக்கான தொழில்சார் பயிற்சிகள், கல்விமுறை மற்றும் மொழிதிறன் வளர்ப்பு போன்றவற்றில் அவர்களின் திறமைகளை வளர்க்க ஒரு நாடு எந்த அளவில் முதலீடு செய்திருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய “உலக திறமையான நாடுகள் – 2018” உலகளாவிய ஆய்வில் இந்தியாவானது மொத்தம் 63 நாடுகளில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

2017ம் ஆண்டில் இந்தியா 51வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nov 22 - ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது அதிவேக இரயில் பாதை தொடக்கம்

ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது அதிவேக இரயில் பாதை தொடக்கம

ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது மற்றும் மொராக்கோவின் முதல் அதிவேக இரயில் பாதையானது டேன்ஜியரில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மொராக்காவின் மன்னர் ஆறாம் முகம்மது ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த இரயில்பாதைக்கு “அல் போராக்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரஞ்ச் மொழியில் LGV என அறியப்படும். இந்த இரயில் பாதையானது டேன்ஜியர் மற்றும் கஸா பிளான்கா ஆகிய இரு நகரங்களின் பொருளாதார மையங்களை இணைக்கிறது.  

Nov 22 - வருவாய் துறையின் புதிய செயலாளராக அஐய் பூஷன் பாண்டே நியமனம்

வருவாய் துறையின் புதிய செயலாளராக அஐய் பூஷன் பாண்டே நியமனம்

நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது அஐய் பூஷன் பாண்டேவை வருவாய் துறையின் புதிய செயலாளராக நியமித்துள்ளது.

இவர் நவம்பர் 30-ம்தேதி முதல் பணி ஓய்வு பெறும் ஹஸ்முக் அதியாவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார். தற்போது, அஐய் பூஷன் பாண்டே – UIDAI ன் CEO – ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nov 22 - இந்திய சமூகப் பணி மாநாடு (Indian Social Work Congress)

இந்தியாவில் சமூகப்பணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய விவகாரங்களை கலந்துரையாடுவதற்காக சமூக அளவில் சகோதரத்துவத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, இந்திய சமூகப் பணி மாநாடு-இன் (Indian Social Work Congress) ஆறாவது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.

2018 –ஆம் ஆண்டு மாநாட்டின் கருத்துரு “மனித மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் சமூகப் பணிக்கான கல்வி மற்றும் நடைமுறைக்கு தவிர்க்க இயலாதவை” என்பதாகும். இந்த மாநாடு முதன்முதலில் 2013-ல் நடத்தப்பட்டது.

Nov 22 - இமயமலைப் பகுதியில் இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையம் (HRSC) தொடக்கம்

இமயமலைப் பகுதியில் இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையம் (HRSC) தொடக்கம்

இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது(HSRC – Himalayan State Regional Council). இந்த ஆணையமானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி.கே. சரஸ்வத் தலைமையில் செயல்பட உள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர், உத்திரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை உள்ளடக்கிய இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆணையமாக இந்த ஆணையம் செயல்படும்.

Thursday, November 22, 2018

Nov 21 - உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இந்தியா 2 பதக்கம்

உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆண்கள், பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. அசர்பெய்ஜான் தலைநகர் பாகுவில் உலக கோப்பை அக்ரோபாடிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடக்கிறது. 

ஆண்கள் பிரிவில் பிரின்ஸ், சித்தேஷ், ரிஷிகேஷ், ரெஜிலேஷ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.

மொத்தம் 20.560 புள்ளிகள் பெற்ற இவர்கள் மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றனர். தங்கம், வெள்ளி முறையே ரஷ்ய அணி கைப்பற்றியது.

பெண்கள் பிரிவில் ஆயுஷி, பார்கி, பிராசி, வால்டே அடங்கிய இந்திய அணி 18.200 புள்ளிகள் பெற்று வெண்கலம் கைப்பற்றினர். 

ரஷ்ய அணி வீராங்கனைகள் தங்கத்தை வசப்படுத்தினர். பெலாரஸ் அணி வெள்ளி வென்றது.

Nov 21 - சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வர்த்தக மாநாடு

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் (ராய்) சார்பில், 8-வது சென்னை சில்லரை வர்த்தக மாநாடு சென்னையில் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் சில்லரை விற்பனையின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன்  ஆவார்.

Nov 21 - தெலுங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக திருநங்கை போட்டி

தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ’சந்திரமுகி’ எனும் 32 வயது திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

தெலுங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக, திருநங்கை ஒருவர் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Nov 21 - இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் - நவ.21*

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார்.
1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார்.

சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.

என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார்.  1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்றார்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் (நவ.21) இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். 

Nov 21 - நிமோனியா நோயால் இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர்.

இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இங்கு தினமும் 735 குழந்தைகள் இறக்கின்றன. இதன்படி இந்த நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Nov 21 - 3,600 கோடியில் 2 போர்க்கப்பல் கட்ட இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்

கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கான 3,600 கோடி ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தானது. 

இந்திய கடற்படைக்கு தல்வார் ரக போர்க் கப்பல்களை கட்டுவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 

இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவ பொதுத்துறை நிறுவனமான கோவா சிப்யார்ட் லிமிடெட், ரஷ்ய அரசின் ராணுவ மேஜர் ரோசோபோர்ன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.

Nov 21 - ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா

கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார். பதவி விலகியுள்ள எரிக் சோல்ஹிம்  நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவார். 

Nov 21 - ஆந்திராவில் நிலங்களுக்கு "புதார் எண்" புதிய திட்டம்

ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்' என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக, நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண் வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை பயன்படுத்தி, மக்கள், தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில் பார்க்கலாம். ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, துவக்கி வைத்தார். 

Nov 21 - நான்கு கேமராக்களைக் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

நான்கு கேமராக்களைக் கொண்ட, உலகின் முதல் ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் முதல்முறையாக நான்கு ரியர் கேமராக்களை அறிமுகம் செய்தது. 

இந்த போன் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சாம்சங் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.